Tuesday, 23 January 2018
India News

அரசியலுக்கு வருகிறார் ரஜினி; 21 ஆண்டுகால புதிருக்கு விடை கிடைத்தது

நடிகர் ரஜினிகாந்த் 6-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை (இன்று) சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது:

கட்டுப்பாடும், ஒழுக்கமும் மட்டும் இருந்தால் போதும். என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். கட்டுப்பாடோடு இருக்கும் ரசிகர்களை எப்படி பாராட்டுவது எனத் தெரியவில்லை.

நான் அரசியலுக்கு வருவது உறுதி. நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் தனிக்கட்சி தொடங்குவேன்.
அரசியலுக்கு வருவது குறித்து, எனக்கு எந்த பயமும் இல்லை. ஊடகங்களிடையே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பெயர், புகழ், பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரப்போவதில்லை. அரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது; ஜனநாயகம் சீர்க்கெட்டுப்போய் விட்டது.ஜனநாயகம் என்ற பெயரில் மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் நான் முடிவெடுக்காவிடில் குற்ற உணர்வு நான் சாகும் வரை இருக்கும்.

எனக்கு தொண்டர்கள் வேண்டாம்; காவலர்கள் தான் வேண்டும். யார் தவறு செய்தாலும் தட்டிக்கெட்கும் காவலர்கள் நாட்டுக்கு வேண்டும்.

உண்மையான, நேர்மையான ஆன்மிக அரசியல் செய்வதே எனது நோக்கம். ஆண்டவனின் அருளும், மக்களின் ஆதரவும் கிடைக்கும்.

சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு ஆன்மீக அரசியலை முன்னெடுப்பென். அனைவரையும் ஒருங்கிணைக்கும்வரை அரசியல்வாதிகளை ரசிகர்கள் விமர்சிக்கக் கூடாது.



வாக்குறுதியை நிறைவேற்றாவிடில் 3 ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்வேன். உண்மை, உழைப்பு, உயர்வு என்பதே என் கொள்கை. அரசியல் என்னும் குளத்தில் நாம் இன்னும் இறங்கவில்லை; ஆனால் நீந்தத் தெரியும்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். வரும் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை.

கடந்த ஒரு ஆண்டில் நடந்த அரசியல் நிகழ்வு தமிழகத்தை தலை குனியவைத்துள்ளது. எல்லா மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் சட்டப்பேரவை ஜனநாயக போரில் நமது படையும் இருக்கும் என்று தெரிவித்தார்.