Tuesday, 23 January 2018
India News

என்னை நிர்வாணமாக்கி நள்ளிரவில்… ; ஒரு திருநங்கையில் திகில் அனுபவம்.!!!

பெண்களுக்கு மட்டுமே பாலியல் சீண்டல்கள் நடப்பதில்லை. அவர்களைவிட அதிகமாக எங்களுக்கு நடக்குது. ஆனால், எங்களைப் பாதுகாக்க சட்டத்தில் இடமில்லை” எனத் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை வலியோடு பகிர்கிறார், திருநங்கை கிரேஸ் பானு.”திருநங்கைகள் பெருசா பாதிக்கப்படுவது வார்த்தைகளாலும் உடல்ரீதியாகவும் தான். நான் கிராமத்தில் பிறந்தேன். அங்கேதான் ஸ்கூல் படிச்சேன்.

பெற்றோர், உடன்பிறந்தோர் என இருந்தும் குடும்பச் சூழ்நிலையாலும் சமூக சூழ்நிலையாலும் வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். இப்போ எனக்கு 29 வயசு.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களை அனுபவிச்சிருக்கேன்.

ஸ்கூல் படிச்சுட்டிருக்கும்போது என்னைச் சரியாக உணர்ந்தேன். என் பெற்றோரோ, எனக்கு மனநிலை சரியில்லனு மனநல மருத்துமனையில் சேர்த்தாங்க.

அங்கிருந்து தப்பிக்க, ‘நான் நல்லாதான் இருக்கேன். எனக்கு எந்த மாற்றமும் ஏற்படலை’னு பொய் சொல்லி வீட்டுக்கு வந்தேன். பன்னிரண்டாம் வகுப்பு படிச்சப்போ நான் திருநங்கைங்குனு சொல்லி பள்ளியில் ஏத்துக்க மறுத்தாங்க.என் அம்மாவும் அப்பாவும் தலைமை ஆசிரியர் கால்ல விழுந்து கெஞ்சினாங்க. அப்போ தலைமை ஆசிரியர் ரெண்டு கண்டிஷன் போட்டார்.

ஒண்ணு, வகுப்புக்குள்ளே அனுமதிக்காம, அவர் ரூம் வாசலில் செருப்பு வைக்கும் இடத்துல உட்கார்ந்துதான் படிக்கணும். ரெண்டாவது, ஸ்கூலில் யாரும் என்கூட பேசக்கூடாது. நானும் அவங்களோடு பேசக்கூடாது. வீட்டுல உள்ளவங்களுடைய வற்புறுத்தலால் அதுக்கு ஒத்துகிட்டேன்.

அப்போ, ஸ்கூலில் என்னோடு படிக்கிற பசங்களெல்லாம்… அலி போன்ற இழிவுபடுத்தும் வார்த்தைகளில் என்னை கூப்பிடுவாங்க. பாத்ரூம்கூட போக முடியாது.

ஏன்னா, பசங்க பாத்ரூமுக்குள் போனால், நான் எப்படி பாத்ரூம் போறேனு கூடிநின்னு பார்ப்பாங்க. அதுக்கு பயந்தே போக மாட்டேன். அடக்கி வெச்சுட்டு, ஸ்கூல் முடிஞ்சதும் அவசர அவசரமா வீட்டுக்கு ஓடுவேன்.சில பசங்க என்னை சுவத்துல சாய்ச்சு முத்தம் கொடுத்துட்டு ஓடுவாங்க. எனக்கு அருவருப்பா இருக்கும். ஒரு பொண்ணுக்கு இப்படியாச்சுன்னா கம்ப்ளைன்ட் பண்ணலாம்.

ஒரு திருநங்கை யார்கிட்ட சொல்றது? எங்களுக்கு நடந்தா இந்தச் சமூகம் வேடிக்கைதான் பார்க்குமா? தொடர்ந்து அந்த ஸ்கூல்ல நிறைய பாலியல் துன்புறுத்தல்கள்.

அதேமாதிரி வீட்டைச் சுற்றி உள்ளவங்க கொடுத்த டார்ச்சரால், என் வீட்டுல உள்ளவங்களும் என்னை காயப்படுத்தினாங்க. இதை எல்லாம் பொறுக்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறிட்டேன்.

வீட்டைவிட்டு வெளியேறிய திருநங்கையை இந்தச் சமூகம் எப்படி நடத்தும்னு சொல்லணுமா? வெறுத்து ஒதுக்கி பல தொல்லைகளைக் கொடுத்துச்சு.

என்னை மாதிரி ஒரு திருநங்கை அரவணைப்பில் வளர்ந்தேன். அப்போதான் பாலிடெக்னிக் படிக்கப்போனேன். அந்தக் கல்லூரியில் ஒரு சில பசங்க என்னை ஏத்துக்கிட்டாங்க.ஒரு சிலர் திருநங்கைனு ஒதுக்கினாங்க. நான் போகும்போதும் வரும்போதும், ‘ஊரோரம் புளியமரம்’ பாட்டு பாடுவாங்க. அதை எல்லாம் சகிச்சுக்கிட்டுதான் கல்லூரி படிப்பை முடிச்சேன்.

அப்புறம், இன்ஜீனியரிங் காலேஜ் சேர்ந்தேன். கொஞ்சம் ஆறுதல் கிடைச்சது. அங்கே படிச்ச பசங்க, என்னை அக்காவா பார்த்தாங்க; நடத்தினாங்க. ஆனால், சமூக தீண்டாமை, குடும்பத் தீண்டாமையோடு அரசும் தீண்டாமைக்கு உட்படுத்தியதை யார்கிட்ட சொல்லமுடியும்?

நான் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நேரம், ஒரு வீட்டில் நானும் பிரித்திகாவும் (இன்றைய, முதல் திருநங்கை சப் இன்ஸ்பெக்டர்) மட்டும்தான் இருந்தோம்.

நைட் ஒரு மணி இருக்கும்… யாரோ வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டு, ஜன்னல் வழியா பார்த்தோம். ஒரு பையன், ‘கதவைத் திற… நான் உள்ளே வரே’னு சொன்னான்.

நாங்க அவனை ‘போ, போ’னு விரட்டறோம். ஆனாலும், அவன் கதவை தொடர்ந்து தட்டிப் பார்த்துட்டு, கல்லைத் தூக்கி எறிஞ்சான். ரொம்ப நேரம் கழிச்சுதான் போனான்.

நைட் ஒரு மணிக்கு எங்க வீட்டுக் கதவை தட்டி கூப்பிடும் உரிமையை, தைரியத்தை அவனுக்கு யார் கொடுத்தாங்க? அதை நினைச்சு கோபமும் வேதனையும் உண்டாச்சு.

நான் சமூகப் போராட்டகளில் ஈடுபடும்போதெல்லாம் கைதுசெய்து கூட்டிட்டுப் போகும்போது, போலீஸ் கண்ட கண்ட இடத்தில் கை வைப்பாங்க.

அரியலூர் அனிதாவுக்காகப் போராடும்போது என் ஆடைகளைக் கழற்றி, நிர்வாணமா நிக்கவெச்சதை ஏத்துக்கவே முடியாது.

ஒரு பெண் போலீஸ், நான் அறுவை சிகிச்சை பண்ண இடத்தைப் பார்த்துட்டு, ‘என்ன இது இப்படி இருக்கு?’னு சக போலீஸ்கிட்ட சொல்லி சிரிச்சாங்க.

என் மார்புகளையும் தொட்டுப் பார்த்தாங்க. அவங்ககிட்ட என்ன இருக்கோ, அதுதான் என்கிட்டயும் இருக்கு. ஆண்கள் மட்டுமில்லாமல், பொண்ணுங்களும் எங்களை பாலியல் வன்கொடுமை பண்றாங்க.

ஒரு பெண்ணோ, ஆணோ பாலியல்ரீதியா பாதிக்கப்படும்போது, குற்றவாளிமீது வழக்குத் தொடர இருக்கிற சட்டத் திட்டங்கள், எங்களை ஏத்துக்க மறுக்குது.

எங்களுக்காகப் புதுசா ஒரு சட்டம் இயற்ற சொல்லலை. இருக்கும் சட்டத்தில் எங்களையும் இணைக்கச் சொல்றோம். அதுகூட நடக்கலை. நாங்களும் மனிதர்கள்தான் என்பதைச் சட்டமும், சமூகமும் எப்போ உணரப்போகுது?” எனக் கொதிப்புடன் கேட்கிறார் கிரேஸ் பானு.

இதற்கான பதில் நம்மிடம்தான் இருக்கிறது…