Thursday, 24 May 2018
பிராந்திய செய்திகள் வட மாகாணம்

வெடிபொருட்களை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு முகமாலை மக்கள் கோரிக்கை!

கிளிநொச்சி முகமாலை பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேறிய பிரதேசங்களை அண்மித்து உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் காணப்படுகின்ற வெடிபொருட்களை அகற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி முகமாலைப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் குறித்த கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாது, வெடிபொருட்கள் அகற்றுவதில் சவால் நிறைந்த பகுதியாக காணப்படும் முகமாலைப்பகுதியில், வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை மீள்குடியேற்றப்படாமல் கடந்த 19 வருடங்களிற்கு மேலாக வாடகை வீடுகளிலும் பிற மாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு காணப்படுகின்ற பகுதிகளில் வெடிபொருட்களை அகற்றி தம்மை விரைவாக குடியேற்றுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்புக்களும் பரஸ்பரம் தொடர்ந்து சண்டையிட்ட பகுதியாகவும் அதிகளவு ஆபத்தான வெடிபொருட்களை புதைத்த ஓர் பகுதியாகவும் இது காணப்படுவதனால் இந்தப்பகுதிகளில் வெடிபொருட்களை அகற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக இப்பகுதிகளில் வெடிபொருள் அகற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பச்சிலைப்பள்ளிப்பிரதேசத்தில் மேற்குப்புறமான முகமாலை இத்தாவில், வேம்பொடுகேணிஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த தங்களை மீள்குடியேற்றுமாறு இந்தப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, கடந்த 2000ம் ஆண்டு இந்தப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த தாங்கள், கடந்த 19 வருடங்களாக சொந்த ஊரில் வாழமுடியாது அகதிகளாக அலைவதாகவும் இந்தப்பகுதிகளில் காணப்படுகின்ற வெடிபொருட்களை அகற்றி விரைவாக தம்மை மீள்குடியேற்றுமாறு பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 156401 times, 1025visits today)