Friday, 23 March 2018
News Relationship Women

பள்ளி சீருடையில் காதல் காட்சிகள் தேவைதான..? அவசியம் படியுங்கள்.!!!

பிள்ளைகளின் பள்ளி படிப்பு 16 அல்லது 17 வயதுக்குள் முடிந்து விடுகிறது. அந்த 17 வருடங்கள் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையில் குழந்தை பருவம். அதன்பின்னே நாமே விரும்பி வேண்டினாலும் திரும்ப போவதில்லை பிள்ளை பருவம். கண்ணாமூச்சி, கபடி, பாண்டி, பல்லாங்குழி (மன்னிக்கவும் – உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் இந்த அழகிய குழந்தைப்பருவ விளையாட்டுகள் அனைத்தும் காலாவதியாகி விட்டது இன்னொரு சோகம்) என்று பட்டாம்பூச்சியாக பறக்கும் பருவம் இந்த பதினாறு வயதுக்குள் மட்டுமே;அதற்கு பிறகுதான் ஒரு மனிதனின் தலைக்கு மேலே ஓராயிரம் கடமைகள் ஏறுகின்றன. நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல வாழ்க்கைத் துணை, பின் நல்ல பிள்ளைகளை பெற்று அவர்களை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குதல் என்று ஒன்றன்பின் ஒன்றைாக சங்கிலி தொடர் போல் மனிதனின் கடைசி மூச்சு வரை எத்தனை கடமைகள். ஆகவே பிள்ளை பருவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் வண்ணமயமான வானவில் போன்றது.

சிறிது காலமே நிலைத்திருக்கும் இந்த சிறிய இனிமையான திரும்பவும் வராத காலகட்டத்தை, காதல் என்னும் வயதுக்கு ஒத்து வராத விஷயத்தில் மனம் மாறி போய், தடம் மாறி போய், பெற்றோரின் கண்ணீருக்கும் சோகத்திற்கும் ஆளாகி வாழ்க்கையை தொலைத்து வருத்தப்படுவதில் என்ன பயன், அனுபவபூர்வமாக நமக்கு புரியும் விஷயம் இது. ஆனால் வாலிப பருவத்தில் நம் பெற்றோர் வார்த்தையை பல நேரங்களில் புறக்கணித்த நேரங்களே அதிகம்.

அவர்களை தைரியமாக நேரடியாக எதிர்க்காவிட்டாலும், மறைமுறையாக எதிர்மறையாக செயல்பட்ட நேரங்கள் அதிகம். அவர்களுக்கு தெரியாமல் கல்விக் கட்டணத்தை கூட்டி சொல்லி மீதம் இருந்த சிறிய பணத்தில் சொல்லாமல் நண்பர்களுடன் சினிமா பார்த்த அனுபவம் இல்லாத மனிதர்கள் மிக குறைவு. ஆகவே எதுவும் பெரிய பிரச்சனையோ ஆபத்தோ பிள்ளைகளுக்கு ஏற்படாதவரைக்கும் அவர்கள் செய்யும் இந்த சிறிய பிழைகளை மறைமுக கண்காணிப்புடன் மன்னித்து விடலாம்.

ஆனால் இந்த காதல்.. கண்டிப்பாக வரவேற்க தக்க பிழையில்லை. அதுவும் பள்ளிப்பருவத்தில் காதல், வேண்டவே வேண்டாம். மேற்கூறிய விளையாட்டுக்குரிய பிள்ளை பருவம் இந்த வேண்டாத விபரீத காதல் உணர்வால், முற்றிலுமாய் சிதைந்தே போகும். நல்லது எது பொல்லாதது எது என்று பகுத்தறிய முடியாத வயதில் காதல் மட்டும் எப்படி நல்லதை செய்யும். பிள்ளைகளுக்கு நல்ல முறையில் படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகிய நல்ல விஷயங்களை சரியான விகிதத்தில் சிறு வயது முதலே அன்புடனும் நம்பிக்கையுடன் பெற்றோர் சோறு போல ஊட்டி வளர்ப்பது நிறைய பலன் தரும்.

ஆனாலும் இந்த பருவ வயதில் அவர்களுக்கு ஏற்படும் உடல், உணர்வு சம்பந்தப்பட்ட மாறுதல்களை இயன்ற வரை நல்ல முறையில் புரிய வைப்பது மிகவும் முக்கியமானது. பதினெட்டு வயதிற்கு பின்னர் காதல் கனவு காணலாம். மனமும் உடலும் ஓரளவு முதிர்ச்சி பெற்றிருக்கும். அதற்குத்தானே பெண்ணின் திருமண வயது 18 என்று வரையறுத்திருக்கிறார்கள். காதல் கனா காணும் காலங்கள் 18 வயதுக்கு மேல் நலம். Ban love scenes in school uniforms இப்பொழுது அதைவிட முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன்.

ஒவ்வொரு பெற்றோரும் கஷ்டப்பட்டு தன் உயிரை கொடுத்து பிள்ளைகளுக்கு உணவு, கல்வி உடை போன்ற அதனை தேவைகளையும் செய்து அவர்களை கண்ணுக்கு மணியாய் பாதுகாத்து வளர்க்கும் நேரத்தில், பத்து நொடிக்குள் அவர்கள் மனதுக்குள் விஷம் போல் ஏறும் விஷயம் உள்ளது. புரியவில்லையா??.. ஒவ்வொரு வீட்டிலும் வரவேற்பு அறையில் ராஜமரியாதையுடன் உட்கார்ந்திருக்கும் டிவி. ஒவ்வொரு கையிலும் கையகல செல்போன், டேபிள் மீது செல்லமாக இருக்கும் கம்ப்யூட்டர், மடியின் மேல் உரிமையுடன் உட்காரும் லேப்டாப். கண்ணாடித் திரையில், பள்ளி சீருடையுடன் வரும் இரு சிறு பிள்ளை காதல் செய்யும், கண்களால் சிமிட்டி கவரும் காட்சி ஒன்று பாடும்.

நீங்கள் கோட்டை கட்டி வைத்திருக்கும் பிள்ளை மேல் பாசத்தையும், அவர்கள் நல்ல படிப்பு படித்து நல்ல வேலைக்கு சென்று சமூகத்தில் நல்ல அந்தஸ்து பெற்று வாழ வேண்டும் என்ற நியாயமான ஒவ்வொரு பெற்றோரின் உயிர்க்கனவையும் தகர்த்து தவிடு பொடியாக்குவற்கு. பார்த்தீர்களல்லவா, பள்ளி சீருடையில் பிரியா பிரகாஷ் ஒரு கண்ணசைவுக்கு உலகம் முழுதும் ஆடி போன கோலத்தை. இதில் நீங்கள் யார், நான் யார்? யாருடைய அசைவு அந்த பிள்ளைகளை ஈர்க்க முடியும், மனதில் பிரியா பிரகாஷின் கண்ணசைவுக்கு முன்? அதுவும் ஸ்கூல் யுனிபோர்ம் போட்டு அந்த பெண் கண்ணடித்து செய்யும் காதல் சைகையினால் உங்கள் வீட்டிலிருக்கும் பள்ளிப்பருவ பிள்ளைகளின் மனதில் காதல் ஆசையை தூண்டி விடாதா? அந்த ஆசையை முறியடிக்க பெற்றோர்களாகிய உங்களிடத்தில் பெரிய மாயசக்தி ஏதேனும் கைவசம் உள்ளதா? பெற்றோர்களே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

இது பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட சினிமா, டிவி, எனும் மிகப்பெரிய ஊடகங்களின் நேரடி பங்களிப்பாகும். அந்த பிரியா பிரகாஷ் கண்ணசைத்து அந்த பள்ளி சிறுவனை சாய்ப்பது போல் உங்கள் வீட்டு, உங்கள் உயிரை கொடுத்து வளர்க்கும் செல்ல பெண் எந்த சிறுவனை எந்த இளைஞனை சாய்க்க முயன்று கொண்டிருக்கிறாளோ? உங்கள் மடியிலே கொஞ்சி நீங்கள் ஊட்டி விடும் உங்கள் செல்ல பள்ளி பருவ மகன் எந்த சிறுமியின் கண்ணசைவுக்கு தவமிருந்து தெரு முனையில் நின்று கொண்டிருக்கிறானோ ? இது பெற்றோர்களாகிய உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?

உங்கள் வீட்டு செல்ல சிறுமி கண்ணசைக்கவில்லை என்ற கோபத்தில் எந்த ஒருதலைக்காதல் வெறியன் அவளை நாசம் செய்ய காத்திருக்கிறோனோ? உங்கள் அன்பு செல்ல மகன் யாரோ ஒரு சிறுமி கண்ணசைக்கவில்லை என்று சித்தம் கலங்கி தற்கொலைக்கு தயாராகி கொண்டிருக்கிறானோ? இந்த விபரீதமெல்லாம் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறியாக கொண்ட ஊடகங்களுக்கு புரிய வாய்ப்பில்லை, ஏனெனில் வாழ்க்கையை தொலைக்க போவது உங்கள் வீட்டு செல்ல பிள்ளைதானே?

அந்த ஒரு உயிர் உங்களுக்கு மட்டும்தான் பெருமதிப்பு வாய்ந்தது, அவர்களுக்கு அது தூசிக்கு சமன்தானே? தயவு செய்து விழித்து கொள்ளுங்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையையும், நாட்டையும் தம் ஊடக ஒளிபரப்பால் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய பெரும் பொறுப்பும் சக்தியும் வாய்ந்த ஊடகங்கள், வெறும் லாப நோக்குடன் வியாபார ரீதியில் வெற்றி பெறுவதே குறிக்கோளாக மாறி போய் உள்ளது. அவர்களுக்கு சமுதாய பொறுப்பு அதிகம் தேவை. பிள்ளைகளை நல்வழிப்படுத்த உன்னத பொறுப்பு பெற்றோர்களாகிய நம் கையில்தான் உள்ளது.அதுவும் விடலை பருவத்தில் பிள்ளைகளின் கவனம் காதல் என்று சிதறிவிடாமல் பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு மட்டுமே, ஆகவே இந்த பள்ளி பருவ காதல் காட்சிகளையும், பள்ளி சீருடையுடன் காதல் செய்யும் காட்சிகளையும் நிரந்தரமாக தடை செய்ய ஒவ்வொருவரும் வலியுறுத்த வேண்டிய நேரத்திற்கு வந்து விட்டோம். இத்தகைய காட்சிகளை அரசாங்கம் முழுமையாக தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு மக்கள்தான் அழுத்தம் தர வேண்டும். உயிரைக் கொடுத்து பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒவ்வொரு பெற்றோரும், பள்ளிப் பிள்ளைகள் காதல் என்று தடம் மாறி வாழ்வை தொலைத்து விடும் ஆபத்திலிருந்து நம்மையும் பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டியது நம் கடமையே.

இ்காகதை ஒற்றுமையுடன் செயல்படுத்துவோம். சிறுவர்களுக்கு உடல் ரீதியாக இழைக்கப்படும் தீமைகளிலிருந்து போஸ்கோ சட்டம் காப்பது போல், 18 வயதிற்குட்பட்ட காதல் காட்சிகளை அதுவும் பள்ளி சீருடையில் காதல் செய்யும் காட்சிகளை கண்டிப்பாக தடை செய்யும் சட்டம் கொண்டு வந்து பிள்ளைகளுக்கு ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளிலிருந்து காப்பாற்ற வகை செய்ய வேண்டும். அதற்காக பாடுபடுவோம். –
சுஜாதா ஜெயராமன்.
oneindia.com