Friday, 23 March 2018
Article News Srilanka Thillu Mullu

மட்.வின்சட் மகளிர் பாடசாலை மற்றும் புனித மிக்கேல் கல்லூரியின் தமிழ் அழிப்பு.!!

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை முதலில் அழிக்க வேண்டும். ஒரு மொழியை அழிக்க வேண்டுமானால், அதன் பாவனை, அதன் மூலங்கள்(புத்தகங்கள் இதர மொழிவளமூலங்கள்) என்பவற்றை அழிக்க வேண்டும்..

மகாகவி பாரதியின் கவலை

தன் காலத்தில் ஆங்கிலேய ஆதிக்கத்தை பார்த்த, மகாகவி பாரதியார் ஒரு பாடலில் “மெல்ல தமிழ் இனி சாகும் என ஒரு பேதை கூறுகிறான்” என்று தனது கலக்கத்தை வெளிப்படுத்தினார்.அதை தடுப்பதற்கான வழிமுறையாக, “எட்டுத் திக்கும் செல்வோம் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்போம்!” என்று தமிழில் முதல்தர படைப்புகளும் மொழிபெயர்ப்பு நூல்களும் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை தமிழ் மக்களுக்கு விட்டுச் சென்றார்.

எழுத்துவடிவம் இல்லாத பேச்சு மொழிகள்கூட, காற்றலைகளில் வாழ்ந்து ஒரு இனத்தின் கலாசாரத்தை காக்கிறது.

தாய்மொழிக் கல்வியே தரம்

தாய்ப்பாலையே புறக்கணித்து வளரும் தலைமுறைக்கு தாய்மொழிக் கல்வியின் அருமை எப்படி தெரியவரும்?
வெளிநாட்டு வேலைகளுக்காகவும், அதிக பயன்பாடு உள்ளதாகவும் நினைத்து ஆங்கிலம் போன்ற சில மொழிவழிக் கல்வியில் மட்டுமே படிப்பவர்கள், தங்களுக்கு தேவையான இலக்குகளை அடைந்தாலும் அடிப்படை ஞானம் குறைந்தவர்களாக வாழ்கின்றனர்.

தமிழ் மண்ணில் பிறந்த குழந்தைக்கு ’பச்சை’ என சொன்னதும் பசுமையான வயல்வெளிகள் மனக்கண்ணில் தோன்றுவதுபோல ‘கிரீன்’ என்று சொல்லும்போது ஏற்படாது. உதாரணத்திற்கு நம் தாய்மொழியில் அருவருப்பான, ஆபாசமான வார்த்தைகளை பேசவும் கேட்கவும் பொது இடத்தில் அச்சப்படுகிறோம்.

அதே பொருள் உள்ள அயல்மொழி வார்த்தைக்கு முகம் சுழிப்பதில்லை. இதற்கு காரணம் நம் தாய்மொழியின் அன்யோன்யம்தான் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தாய்மொழியில் சிந்திப்பது வலிமையுடையது. அயல்மொழியில் புலமையிருந்தாலும் அது மேம்போக்கானதே. தாய்மொழியில் கல்லாதது ஒருவித சிந்தனை ஊனமே.

பாரம்பரிய பாதுகாப்பு

ஒரு நாடு என்பது ஆட்சி மற்றும் நிர்வாக எல்லையை குறிக்கிறது. ஒரு நாட்டில் பல மதத்தினர், மொழியினர் வாழ்வதால் ஒரு நாடு பல இனத்தவர்களுக்கு பூர்வீகமாக இருக்கலாமே தவிர, தனி ஒரு இனத்துக்கு மட்டும் பாரம்பரியமாக இருப்பதில்லை.
மதம் ஒரு வாழ்க்கைமுறை கோட்பாடுதான். எந்த காலகட்டத்திலும் மாற்றிக்கொள்ள முடிவதுதான். அதனால், மதமும் பாரம்பரியமாகாது.

ஜாதி ஒரு சதி, மூடநம்பிக்கை என்று சொல்வதை கொள்கையாக பார்த்தாலும், ஜாதி ஒரு தொழிலை மையப்படுத்தி ஏற்பட்டதாக உள்ளது.
அதில் உயர்வு தாழ்வுகள் வேறு,
ஜாதி உருவான காலத்தில் ஒருசில தொழில்கள் மட்டுமே இருந்தது. காலத்திற்கேற்ப தொழில்கள் பெருகுவது, மக்கள் புதியபுதிய தொழில்களில் ஈடுபடுவது ஜாதியையும் பாரம்பரியத்துக்கு தகுதியிழப்பு செய்கிறது.

எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எந்த மதத்தை தழுவினாலும் எத்தனை மொழிகள் கற்றாலும் தாய்மொழி மட்டுமே ஒரு மனிதனின் பாரம்பரியமாக விளங்குகிறது.

இங்கு நான் மேலுள்ள இந்த கருத்துக்களை நினைவூட்டுவதற்குக்காரணம் எமது மட்டக்களப்பு மண்ணில் எமது தமிழ் இனத்தை அழிப்பதற்கென்றே ஒரு மேட்டுக்குடி முகமுடி அணிந்த ஆங்கிலேய அடிமைக்கூட்டமொன்று மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செயலாற்றிக்கொண்டிருக்கிறது…

நேற்றைய தினம் (16.02.2018) மட்/வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலை வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி வெபர் மைதானத்தில் நடைபெற்றது, இதில் தமிழைப்புறக்கணித்து முழுக்க முழுக்க ஆங்கில அறிவுப்புக்களே இடம்பெற்றது… தமிழ்மொழிப்பாடசாலை , 100% தமிழ் மொழி பேசுவோர் உள்ள பிரதேசம்!!

இதன் மூலம் இவர்கள் என்ன நோக்கத்தை அடைய எத்தனிக்கின்றனர்???

மற்றுமொரு சம்பவம் கடந்த வருடம் நடைபெற்றது..

கடந்த வருடம் (2017) மட்/ புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு விழாவிலும் இந்த அடிமைகள் ஆங்கிலத்தில்தான் முழுக்க விழாவை நடத்தினார்கள்…
அதில் சுவாரசியம் என்னவென்றால் பேசியவர்கள் முக்கால்வாசிப்பேருக்கு ஆங்கலம் சரளமாகப் பேசத்தெரியாது எழுதிக்கொண்டுவந்துதான் வாசித்தவர்கள்…அந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் (1000க்கு மேற்பட்டோர்) படித்த மற்றும் படிக்காத பாமரப்பெற்றோர்களும் மாணவர்களும் பழைய மாணவர்களும்தான் அனைவரும் தமிழ் தெரிந்த தமிழ் பேசுவோர்…
பிரதம அதிதியாக கலந்துகொண்ட மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் மட்டுமே தமிழ் தெரியாத சிங்களவர்…
அப்போ அந்த விழா அவருக்கு மாத்திரமா நடத்தினார்கள்???
ஆனால் அந்த செயலாளரோ தான் பேசும் போது தனிச்சிங்கத்தில் உரையாற்றினார்… இந்தத் தமிழர்கள்தான் தமிழை புறக்கணித்து இனத்தின் அடையாளத்தை அழிக்கின்றனர்..
சிங்களவனோ தமிழரிடத்திலும் சிங்களத்தை வளர்க்கிறான்…

மட்டடக்களப்பு நகர புளியந்தீவிலுள்ள ஆங்கிலேயனின் எச்சங்கள் தமிழை சிதைப்பதில் பெரும்பங்காற்றிக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் இங்குள்ள யதார்த்தம்…

ரூபாகரன்_சண்முகம்